சுயநல நோக்கோடு சிந்திப்பதால் தான் வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது என்று ஆர்.நல்லக்கண்ணு பேசினார்.
திருச்சியில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் இலவச திருமண விழா மற்றும் ஏழை மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட கல்வி உதவி தொகை வழங்கும் விழா ஆகியவை புத்தூர் நால்ரோடு ஸ்ரீசண்முகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை தாங்கிப் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு,
சமூக நல தொண்டர்கள் மக்கள் தேவையை சமூக கடமையாற்ற வேண்டும். முன்பெல்லாம் கல்வி நிறுவனங்கள் ஆரம்பித்து ஏழை எளியோருக்கு கல்வியை வழங்கினார்கள். ஆனால் தற்போது கல்வி வியாபாரம் ஆகி விட்டது. நமக்கு தேவையான அனைத்து வாழ்வாதாரங்களையும் இயற்கை வழங்கி உள்ளது. ஆனால் சுயநலநோக்கோடு தனக்கு என்று கொள்ளையடித்து செல்வதால் வருங்கால தலைமுறையினருக்கு வாழ வழி இல்லாமல் போய்விட்டது.
நாட்டில் மனித உணர்வு குறைந்து போனதால் தான் அன்னஹசாரே போன்றவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டது. சுதந்திரத்துக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் விலை ரூ.100 இருந்தது. 130 கிலோ கொண்ட நெல் விலை ரூ.100 இருந்தது. இப்போது 130 கிலோ கொண்ட நெல் விலை ரூ.1,300 ஆக உள்ளது. ஆனால் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.16 ஆயிரத்து 88 ஆக உயர்ந்து உள்ளது. இதனை சாதாரணமானவர்களால் வாங்க முடியுமா?.
தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து இருப்பதே வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்க காரணம். ஒரு முறை கொள்ளையடித்தால் சில காலம் கவலையின்றி வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆன் லைன் வர்த்தகம், தனி பேரத்தால் தான் விலை உயர்வு ஏற்படுவதாக சொல்கிறார்கள். வசதி படைத்தவர்கள் மேலும் வசதி படைத்தவர்கள் ஆகிறார்கள்.
ஏழைகள் சாதாரண தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறார்கள். ஆகையால் சில வள்ளல் குணம் படைத்தவர்கள் இது போன்ற இலவச திருமணங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்வது காலத்தின் தேவை. மக்களின் மீது அக்கறை படுகிறவர்கள் இருப்பதால் தான் மனித நீரோட்டம் இருக்கிறது என்றார்.

No comments:
Post a Comment