விக்ரம் நடிப்பில் மே மாதம் ரிலீஸாகவிருக்கும் 'தெய்வத் திருமகன்' படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள 'தெய்வத் திருமகன்' தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது.
எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம்.
இரட்டை வேடம்...
இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய-மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் இனப் படுகொலைதான் நடந்துள்ளது, இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க் குற்றவாளிதான் என்று ஐக்கிய நாடுகள் சபையே அறிவித்த பின்னரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்துக் கொள்வது கண்டனத்திற்குரியது.
எனவே இலங்கை அதிபர் ராஜபக்சேவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இலங்கைக்கு இந்திய ராணுவம் எந்த வகையிலும் உதவக் கூடாது. அவ்வாறு உதவினால் அது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும். ஈழத்தமிழர்களுக்கு நிரந்தர அமைதி தீர்வு காண வேண்டும்.
இதற்கு முன்னோட்டமாக கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு காணவும், தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் வலியுறுத்தி விரைவில் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:
Post a Comment