மும்பை கடல் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் வெடி பொருட்களுடன் ஒரு கப்பல் ஊடுருவ வருவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மும்பை கடலோர காவல் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தீவிரவாதிகள் ஊடுருவி பெரிய அளவில் தாக்குதல் நடத்தி விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கையுடன் நேற்று மும்பை கடல் பகுதியில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தப்பட்டது.
மத்திய உளவுத் துறை, தீவிரவாத எதிர்ப்புப் படை, அதிரடிப்படை, கடலோர காவல்படை, கடற்படை, மும்பை போலீசார் ஒருங்கிணைந்து இந்த அதிரடி வேட்டையை நடத்தினார்கள்.
அப்போது மும்பை கடல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த டென்மார்க் கப்பல் ஒன்றை பார்த்தனர். அந்த கப்பலை பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடத்தனர். டெனீசியா சன்ரைஸ் என்ற பெயருடன் வந்திருந்த கப்பலில் 8 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் தாங்கள் வியாபாரிகள் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து கப்பலில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கப்பலுக்குள் எந்த ஆயுதமும் இல்லை என்றாலும் பாதுகாப்பு படையினர் மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
மும்பை கடல் பகுதியில் ஊடுருவ தீவிரவாதிகள் கப்பலில் வருவதாக உளவுத் துறையினர் கூறினாலும், அந்த கப்பல் கடலில் எந்த பகுதியில் வருகிறது என்ற தகவலை வெளியிடவில்லை.
இதனால் மும்பை கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மும்பை கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட கடற்படை சார்பில் கூடுதல் கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment