'அவன் இவன்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. 'தடுக்கிவிழுந்தால் கூட தாவங்கட்டை நோகாது' என்கிற அளவுக்கு பாதுகாப்பான நெரிசல். விஷால், ஆர்யா, ஜனனி, மது ஷாலினி, அம்பிகா என்று படத்தில் நடித்த அத்தனை பேரும் மணிக்கணக்கில் காத்திருக்க, தனக்கேயுரிய அமைதி சிரிப்போடு வந்தார் பாலா. விழா துவங்கியது. எல்லாரும் இரண்டே நிமிடங்களில் சொல்ல வந்ததை சொல்லி முடிக்க, ஆர்யாவின் பேச்சுதான் அதிக நேரம் நீடித்தது. ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்கிற ஏக்கமே வந்துவிட்டது பார்வையாளர்களுக்கு. சாலமன் பாப்பையாவும் திண்டுக்கல் லியோனியும் சரி விகிதத்தில் மிக்ஸ் ஆகியிருந்தார்கள் அவரது பேச்சில்.
விஷால் இந்த படத்தில் பிரமாதமா நடிச்சிருக்கான். அதுவும் மாறுகண்ணோட நடிக்கறது சாதாரண விஷயமில்ல. அவனே அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிட்டு இருப்பான். பாலா சார், தம்பி அந்த லெப்ட் முழியை மேலே தூக்கு. இப்ப செஞ்ச பாரு. அதை அப்படியே ரைட்ல கொண்டு வாம்பார். என்னய்யா இந்தாளு நம்மளை மாறு கண்ணுன்னே நினைச்சுட்டாரு போலிருக்கேன்னு அலறுவான் விஷால். ஷூட்டிங் முடிஞ்சு ரூமுக்கு வந்தால் நரம்பெல்லாம் புடைச்சுருக்கும். தலைவலிக்குதேன்னு புலம்புவான். ஒரு குவார்ட்டரை அடிச்சுட்டு படு. எல்லாம் சரியாயிரும்னு சொல்லுவேன். அப்படியே அடிச்சு அடிச்சு இப்ப 'நைன்ட்டி' இல்லாம தூங்கறதே இல்லை அவன் என்று கேஷுவலாக போட்டுத் தாக்கினார் ஆர்யா.
பின்னாலேயே பேச வந்தார் விஷால். சும்மாயிருப்பாரா? இந்த படமே ஆர்யாவால்தான் கிடைச்சது என்ற உண்மையை கூறிவிட்டு ஒரு முக்கியமான விஷயத்தை கூறினார். நான் ஒரு காட்சியை எடிட்டிங்கில் பார்த்துட்டு ஆர்யாவிடம் சொன்னேன். யேய் இந்த ஷாட் அப்படியே சத்யஜித்ரே படம் பார்த்த மாதிரியே இருந்திச்சுடா என்று. மறுநாள் என்னை பார்த்த ஆர்யா, நம்ம படம் பாணா காத்தாடி மாதிரி இருக்குன்னு சொன்ன. அப்படி இல்லையேடான்னான். நான் எங்கடா அப்படி சொன்னேன்னு கேட்டேன். நீதானாடா நேத்து சத்யஜோதி படம் மாதிரி இருக்குன்னு சொன்னேன்னு கேட்டான். அப்புறம்தான் அது சத்யஜோதி இல்லைடா, சத்யஜித்ரே. அவரு பெரிய டைரக்டர்னு விளக்கினேன். ஆனால் மற்ற விஷயங்களில் அவன் அப்டேட்டா இருப்பான் என்றார்.
சில பொய்கள் கேட்க கேட்க இனிமை!

No comments:
Post a Comment