நெல்லை மாவட்ட சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வசந்தகுமார், வேல்துரை ஆகியோரை ஆதரித்து நடிகர் வடிவேலு நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கிடைத்த நலத்திட்டங்கள் மற்றும் தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் எல்லோருக்கும் கிடைக்க கலைஞரை 6-வது முறையாக முதல்- அமைச்சர் ஆக்குங்கள்.
தலை பெரிதாக இருந்தால் தலைவர் கிடையாது. அறிவு, ஆற்றல் உள்ளவர்தான் தலைவர். அப்படிப்பட்ட அறிவும் ஆற்றலும் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான். கடந்த 2 நாட்களுக்கு முன் தன் கட்சி வேட்பாளரையே ஒருவர் அடித்தார். நேற்று கட்சி தொடங்கியவரெல்லாம் முதல்- அமைச்சர் ஆவேன் என்று கூறுகிறார்.
கருப்பு எம்.ஜி.ஆர்., சிகப்பு எம்.ஜி.ஆர். என என்னென்னவோ சொல்லி கொண்டு திரிகிறார்கள். எல்லா ஏழைகளுக்கும் அடிப்படை தேவை உண்டு. அதை நிறைவேற்றி கொடுப்பதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முக்கிய பங்கு வகிக்கிறது. பாமர மக்களுக்காக ஏராளமான திட்டங்களை தி.மு.க. அரசு செய்து கொடுத்துள்ளது. மக்கள் எழுச்சியால் தி.மு.க. கூட்டணிக்கு அமோக ஆதரவு உள்ளது.
ஆகவே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்யுங்கள். எதிரணிக்கு வாக்களித்தால் ஆப்பு வைத்து விடுவார்கள். இதை நீங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment