அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டசபை தேர்தலின் போது மேலூர் தொகுதிக்குட்பட்ட அம்பலக்காரன்பட்டி கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் உதவி தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து, வீடியோகிராபர் கண்ணன் ஆகியோர் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கீழவளவு போலீசில் அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரகுபதி, திருஞானம் ஆகிய 4 பேர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த 4 பேருக்கும் முன் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இதற்கிடையில் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட தாசில்தார் காளிமுத்து, தன்னை யாரும் தாக்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்தார். ஆனால், காளிமுத்துவை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்தது.
இந் நிலையில் அழகிரி உள்ளிட்ட 4 பேரும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவி்ல், கடந்த 1ம் தேதி ஒரு கோவில் நிகழ்ச்சியின்போது தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாக எங்கள் மீது கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். புகார் அளித்ததாக கூறப்படும் தாசில்தார் காளிமுத்து, மாவட்ட கலெக்டர் சகாயத்தின் தூண்டுதலின் பேரில் பொய் புகார் அளித்ததாகவும், கோவில் நிகழ்ச்சியில் என்னை யாரும் தாக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே எங்கள் மீது காழ்புணர்ச்சி காரணமாகவும், களங்கப்படுத்தும் நோக்கத்தோடும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment