தர்மபுரி மாவட்டத்தில், இதுவரையில் நடந்த தேர்தல்களை விட, அதிகபட்சமாக, 81 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இது எந்த கட்சிக்கு சாதகமாக, எந்த கட்சிக்கு பாதகமாக இருக்கும் என்பது குறித்து, அரசியல் கட்சியினர் மத்தியில் பட்டிமன்றம் துவங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகளில், மொத்தம், 9 லட்சத்து, 88 ஆயிரத்து, 932 வாக்காளர்கள் உள்ளனர். ஐந்து தொகுதியிலும் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஓட்டு பதிவு நடந்துள்ளது. 81 சதவீத ஓட்டுப்பதிவால், அரசியல் கட்சியினர் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என விவாதம் செய்ய துவங்கியுள்ளனர்.
கடந்த, 2001ம் ஆண்டு தேர்தலில், 53.38 சதவீதமும், 2006ம் ஆண்டு தேர்தலில், 71.08 சதவீதமும் ஓட்டுப்பதிவானது. கடந்த தேர்தலை விட, 10 சதவீதம் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், புதிய வாக்காளர்கள், 4 முதல் 6 சதவீதம் வரை ஓட்டு பதிவாகியிருக்கும் என தெரிகிறது.
கடந்த காலங்களை விட ஓட்டு சதவீதம் அதிகரித்து இருப்பது, தேர்தல் கமிஷன் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் தேர்தல் கமிஷனில் பல்வேறு அதிரடி நடவடிக்கை காரணமாக இருக்கும் என்பது, நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆளுங்கட்சியினர், ஓட்டுப்பதிவு வரை, விடாமல் பணம் பட்டுவாடாவில் தீவிரமாக ஈடுபட்டனர். ஓட்டு போட செல்லும் வாக்காளர்களுக்கு, பல்வேறு வகையில் பணத்தை கொடுக்க முயன்ற போதும், வாக்காளர்கள் பலர் ஓட்டுக்கு பணம் பெறுவதை பெரிதாக எடுத்து கொள்ளாமல், தங்கள் விருப்பம் போல் ஓட்டு போட்டு சென்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதியிலும் ஓட்டு சதவீதம் அதிகரித்து இருப்பது குறித்து, மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும், யாருக்கு சாதகம், பாதகம் என விவாதம் நடக்க துவங்கியுள்ளது. கடந்த கால தேர்தல்கள் முடிவுகளை ஒப்பிட்டு, தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆளுக்கொரு கருத்தை கூறி வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளுக்காக, எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு ஒரு மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், மக்களின் விவாதங்களும் ஒரு மாதம் வரையில் தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஓட்டு சதவீதம் அதிகரிப்பால் வாய்ப்பு யாருக்கு என்பதும், மக்களின் அமைதியான ஓட்டுப்பதிவு யாரை வீழ்த்துவதற்காக அதிகரித்தது என்பதும், மே 13ம் தேதி வெளிச்சத்துக்கு வந்து விடும்.

No comments:
Post a Comment