நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த லூக்போமெர்ஸ்பேச் டெல்லி ஹோட்டலில் மது அருந்திவிட்டு தம்மிடமும் தமக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் கணவரிடமும் மிக மோசமாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பெண் தெரிவித்துள்ளார்.
தர்ம அடி கொடுத்த லூக்
ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நேற்று போட்டி நடைபெற்றது. போட்டிக்குப் பின்னர் ஹோட்டலுக்குத் திரும்பிய லூக்போமெர்ஸ்பேச் மது அருந்திவிட்டு அமெரிக்கப் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார். இதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் வருங்கால கணவர் ஷகில் பிர்ஷாதாவை வெளுத்துக் கட்டியுள்ளார். பளார் பளார் என கன்னத்தில் அறைந்திருக்கிறார்.
இதில் படுகாயமடைந்த ஷகில் இன்று காலை டெல்லி சாணக்கியபுரி பகுதியில் உள்ள பிரிமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. ஒரு காதில் பலத்த அடி விழுந்துள்ளது என்று மருத்துவர் பலுஜா தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
இதனிடையே பாதிக்கப்பட்ட அமெரிக்கப் பெண்மணி லூக்போமெர்ஸ்பேச் தம்மைக் கட்டிபிடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், அவரோட பெயர் கூட எனக்குத் தெரியாது. அவர் எங்களோட கொஞ்ச நேரம் மது அருந்தினார். பின்னர் அவர் என் வருங்கால கணவர்கிட்ட ஏதோ சொன்னார். அதை நான் விரும்பவில்லை. அதுக்குப் பிறகு எங்களோட அறைக்குப் போய்ட்டோம். அவரும் அவரோட அறைக்குப் போயிருப்பார்னு நினைச்சோம். அறைக்குள் நுழைஞ்சு கட்டிப் பிடிச்சு ரொம்ப மோசமாக நடந்துகிட்டாரு. என்னோட வருங்கால கணவர் அதைத் தட்டிக்கேட்டதுக்கு போட்டு உதை உதைன்னு உதைச்சுட்டார்...அவர் ரொம்ப சீரியசாக இருக்கார் என்றார் அவர்.
உயிருக்கு ஆபத்து
மேலும் தாம் கொடுத்த பாலியல் புகாரை திரும்பப் பெறாவிட்டால் தம்மைக் கொலை செய்யப் போவதாக பலரும் தொலைபேசியில் மிரட்டுகின்றனர் என்றும் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆயுள் தண்டனைப் பிரிவு
லூக் மீது தற்போது 354, 323, 454 மற்றும் 511 ஆகிய குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐ.பி.சி. 511 என்பது ஆயுள்தண்டனை விதிக்க வகை செய்யக் கூடிய சட்டப் பிரிவு ஆகும்.

No comments:
Post a Comment