தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் யாருக்கு தெரியும் என்ற படம் தயாராகியுள்ளது. காமராஜ் இயக்கியுள்ளார். கலாபவன் மணி, ஜெயப்பிரகாஷ், ரியாஸ்கான், சஞ்சனாசிங் மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். அரு பேர் ஆர்ட் வெஞ்சுரா படநிறுவனம் சார்பில் எஸ்.ஸ்ரீதரன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பில் காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி போலி பில் மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் ஸ்ரீதரன் போலீஸ் துணை கமிஷனர் சிவகுமாரிடம் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
யாருக்கு தெரியும் பட வேலைகளில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நட்பு முறையில் உதவ வந்தார். புரொடக்ஷன் மானேஜர்களிடம் பணம் கொடுத்தால் ஏமாற்றி விடுவார்கள் என்று சொன்னார். பணம் கொடுக்கல் வாங்கலை அவரே பொறுப்பேற்று செய்தார். படப்பிடிப்பு முடிந்ததும் கணக்கு கேட்டேன். தராமல் இழுத்தடித்தார் படத்துக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் பட்ஜெட் நிர்ணயித்தோம். ஆனால் ரூ.1 கோடியே 40 லட்சம் எடுத்துக்கொண்டார். மேலும் ரூ.25 லட்சம் தந்தால் படம் முடியும் என்றார்.
ஆனாலும் கணக்கு விவரங்களை தர மறுத்தார். வற்புறுத்தி கேட்போது தர முடியாது என்னவேண்டுமானாலும் செய்து கொள் என மிரட்டும் தொணியில் பேசினார். பிறகு பில் எதுவும் இல்லாமல் கணக்கு எழுதி கொடுத்தார். அதை ஆராய்ந்தபோது மோசடி நடந்திருப்பது கண்டு அதிர்ச்சியானேன். படத்தில் வேலை பார்க்காதவர்கள் பெயரில் சம்பளம் என்ற பெயரில் பணம் எடுக்கப்பட்டு இருந்தது. கேமராவுக்கு வாடகை கொடுத்ததாக அவருக்கு சொந்தமான கம்பெனி பெயரில் ரூ.4 லட்சம் எடுத்து இருந்தார். அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்று வந்ததற்கான பயண செலவுகளை கம்பெனி கணக்கில் காட்டி பணம் எடுத்து இருந்தார்.
படத்தில் வேலை செய்யாத துணை நடிகர்கள் பெயரில் செக் வாங்கி போய் ரூ.3 லட்சம் பணம் எடுத்துள்ளார். அவரிடம் கொடுத்து வைத்திருந்த இரு செக்குகள் மூலம் பைனான்சியரிடம் ரூ.7 லட்சம் பணம் வாங்கி படத்துக்கு செலவிட்டதாக கூறுகிறார். அவர் மோசடிகளை கண்டு பிடித்ததும் புரொடக்ஷன் மானேஜர் சங்கத்தில் ரூ.15 லட்சம் சம்பளம் பெற்றுத்தரும்படி எங்கள் மீது புகார் அளித்துள்ளார். சங்கத்தினர் விசாரித்த போது சொந்த செலவுக்கு கொஞ்சம் பணத்தை எடுத்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். தற்போது போலீசிலும், திரைப்பட சங்கத்திலும் தனக்கு ஆள் இருப்பதாகவும், உன் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்றும் சொல்லி மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகார் மீது பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு விவரம் குறித்து தயாரிப்பாளர் ஸ்ரீதரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது புகார் மனு போலீஸ் விசாரணையில் இருப்பதால் எதுவும் கூற முடியாது என்றார்.
No comments:
Post a Comment