சன் டிவி குழுமத்துக்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் தனது 2 போயிங் விமானங்களை செளதி அரேபியாவைச் சேர்ந்த நாஸ் ஏர் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டுள்ளது.
வழக்கமாக மழைக்காலத்தில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறையும். இந்த ஆண்டும் இதே நிலை நிச்சயம் என்பதால் பல சேவைகளை விமான நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் விமானங்களை சும்மா நிறுத்தி வைப்பதால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதும் உண்டு. இதைத் தவிர்க்க தன்னிடம் உள்ள அதிகப்படியான விமானங்களை நாஸ் ஏர் நிறுவனத்துக்கு குத்தகைக்குத் தந்துள்ளது ஸ்பைஸ் ஜெட். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் 35 போயிங் ரக விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் ஹஜ் பயணம் தொடங்கவுள்ள நிலையில் நாஸ் நிறுவனத்துக்கு அதிகப்படியான விமானங்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், விமானப் போக்குவரத்து நிறுவன நிபுணர்கள் கூறுகையில், மழைக்காலத்தில் பெரிய அளவில் பயணிகள் குறையப் போவதில்லை. சில வழித் தடங்களில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு போதிய பயணிகள் கிடைக்கவில்லை. இதனால் அந்த வழித் தடங்களில் விமானங்களை நிறுத்தவே இந்த குத்தகை ரூட்டை ஸ்பைஸ் ஜெட் பிடித்துள்ளது என்கின்றனர்.
ரூ. 56 கோடி லாபம் ஈட்டிய ஸ்பைஸ் ஜெட்:
எது எப்படியோ இந்தியாவின் பெரும்பாலான விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் மூழ்கி வரும் நிலையில் கடந்த காலாண்டில் ரூ. 56 கோடி லாபம் ஈட்டிக் காட்டியுள்ளது ஸ்பைஸ் ஜெட்.
No comments:
Post a Comment