மத்திய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்ற முதல் நாளிலேயே அவரை தீவிரவாதம் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் வைத்து வரவேற்றுள்ளது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.
நேற்றுதான் புதிய உள்துறை அமைச்சராக சுஷில் குமார் ஷிண்டே பதவியேற்றார். தனது பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே அவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டு விட்டது.
சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் புனே நகரில் நேற்று நடந்த அடுத்தடுத்த நான்கு வெடிகுண்டுச் சம்பவங்கள் மத்திய அரசுக்கும், ஷிண்டேவுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குண்டுவெடிப்பு நடந்த இடமான பால் கந்தர்வ் தியேட்டருக்கு நேற்று மாலை வருவதாக இருந்தார் ஷிண்டே. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அந்த இடத்தில்தான் ஒரு குண்டு வெடித்தது. இதனால் புனே நகரில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், உளவுத்துறையினரின் பணிகளும் பெரும் கேள்விக்குறிகளை ஏற்படுத்தியுள்ளன.
உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை ஒடுக்க கடுமையாகப் போராடினார். அப்படி இருந்தும் அடுத்தடுத்து பெரும் பெரும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்கத் தவறவில்லை. இந்த நிலையில் புதிய உள்துறை அமைச்சர் பதவியேற்றுள் முதல் நாளிலேயே அவரது சொந்த மாநிலத்தில் ஐந்து குண்டுகள் வெடித்திருப்பது, ஷிண்டேவுக்கு தீவிரவாதம் சவாலுடன் விடுத்துள்ள மிகப் பெரிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment