பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்த கருணாநிதி கவிழ்ந்தது மாதிரி ஒரு நாள் ஜெயலலிதாவும் கவிழ்ந்து போவது உறுதி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர்கள் ரவிக்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,
மக்கள் பிரச்சனைகள் மலை போல் குவிந்துள்ளது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகின்றார். தினமும் ஒரு பொய் அறிக்கைகள் மூலம் ஆட்சி நடத்துகின்றார். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. விவசாயம் அழிந்துவிட்டது. ஏன் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விவசாயம் இல்லை. அது தான் உண்மை.
ஓட்டு போட்ட மக்கள் மின் வினியோகம் குறித்து மின் ஆணையத்திடம் போய் கேட்க முடியுமா? முடியாது. மின்சாரத்துறை அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கி விடுவோம் என்றும், தமிழகத்தில் மின் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று மத்திய மந்திரி ஒருவர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கூறி வருகிறார்.
மறுபுறம் மின் பிரச்சனைக்கு தீர்வு காண உடன்குடியில் மின்உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் என்று சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த திட்டமும் தொடங்கவில்லை.
சட்டம் ஒழுங்கை பார்த்தால், காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் நகையை பறித்து செல்கின்றனர். கனிம வளங்களும் இந்த (அதிமுக) ஆட்சியில் அதிக அளவு கொள்ளை போகிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு போய்வி்ட்டது. இதை சொன்னால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கனிம வள கொள்ளை நடக்கிறது. லஞ்ச ஊழல் நிறைந்து இருக்கிறது. தமிழகத்தில் தான் எஸ்.பி. வீட்டில் ரெய்டு நடக்கிறது.
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிக தயவால் தான் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த உண்மையும் அவர்கள் ஒத்துக் கொள்ள தயாராக இல்லை. மக்களுக்கு ஜெயலலிதா நல்லது செய்யவில்லை.
வருகிற 2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஏன், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பார்க்கலாம், யார் ஜெயிப்பார்கள் என்று தெரியும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்கமாவை முன்மொழிந்தவர் ஜெயலலிதா. அப்படி இருந்தும் ஜெயலலிதாவால் சங்மாவை குடியரசுத் தலைவராக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது ஜெயலலிதா எப்படி பிரதமராக முடியும்?.
ஈழத்தமிழர்களுக்காக டெசோ மாநாடு நடத்துவதாக கருணாநிதி சொல்கிறார். யாரை ஏமாற்றுவதற்கு கருணாநிதி டெசோ மாநாடு நடத்துகிறார் என்று தெரியவில்லை.
பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்த கருணாநிதி கவிழ்ந்தது மாதிரி ஒரு நாள் ஜெயலலிதாவும் கவிழ்ந்து போவது உறுதி.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இதுவரை சீருடை வழங்கவில்லை. பஸ் பாஸ் வழங்கவில்லை. தமிழக மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்க முடியவில்லை.
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை கொண்டு வரப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான். இதனால் நாட்டில் சீரழிவு ஏற்பட்டு வருகிறது. வருகிற 31ம் தேதிக்கு பிறகு என்ன நடக்க போகிறது என்று பாருங்கள் என்றார்.
No comments:
Post a Comment