இந்தி திரைப்பட உலகில் தனது குரல் வளத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பிரபல பாடகர் கிஷோர் குமார். இந்திப் படத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்தி நட்சத்திரங்களுக்கு சமமாக ரசிகர்களை கொண்டிருந்த கிஷோர்குமார், மாபெரும் சகாப்தம் என்று வர்ணிக்கப்பட்டார்.
இவர் 1987-ம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் கடைசியாக பாடிய பாடல், வெளியிடப்படவில்லை. இந்த பாடலுக்கான உரிமையை அரியானா மாநிலம் குர்காவனை சேர்ந்த 'கிங்டம் ஆப் ட்ரீம்ஸ்' என்ற நிறுவனம் பெற்றிருந்தது.
கிஷோர்குமாரின் பிறந்த நாள் விழா வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவர் பாடிய கடைசி சினிமா பாடல் நேற்று ஏலத்தில் விடப்பட்டது. இந்த பாடல் ரூ.15.6 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆனால் என்ன பாடல்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதுதவிர, கிஷோர்குமார் மற்றும் ஷம்மிகபூர் பயன்படுத்திய பல்வேறு பொருள்களும் ஏலத்தில் விடப்பட்டன. ஷம்மி கபூரின் ஜாக்கெட் ரூ.88 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த ஜாக்கெட்டை இந்தி நடிகர் அமீர்கானும் அவரது மனைவி கிரனும் சேர்ந்து ஏலம் எடுத்தார்.
தேவ் ஆனந்த், கையெழுத்திட்ட அவரது கறுப்பு - வெள்ளை போட்டோ ரூ.4 லட்சத்துக்கு ஏலம் போனது. அதேபோல, மறைந்த பிரபல இந்தி நட்சத்திரங்களின் உடமைகளும் ஏலம் விடப்பட்டன. கிஷோர்குமாரின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக இசை நிகழ்ச்சியாக கொண்டாட ‘கிங்டம் ஆப் ட்ரீம்ஸ்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment