சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணேசன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இரண்டு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்த நிலையில், இங்குள்ள எஸ்.எஃப்.ஆர். பெண்கள் கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த சிறுகுளம் கண்மாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, போலீசார், 18ம் தேதி ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் கணேசன் தீக்குளித்து இறந்தார். .. இந்நிலையில் இன்று (24-8-2012) மதியம். 12 மணிக்குள் பெண்கள் கல்லூரிக்குள் குண்டு வெடிக்கப் போவதாக தகவல் வந்தது. உடனே கல்லூரி மாணவிகளை வெளியேற்றிவிட்டு, மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்து விட்டது அக்கல்லூரி. கல்லூரிக்குள் வெடிகுண்டு செயலிழப்புக் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்ட போது, செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை காவல்துறை. சோதனை நடப்பதை படம் எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் வலியுறுத்திய போது “அதெல்லாம் முடியாது.. உள்ளே போனால் உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை.. அதனால், அனுமதிக்க முடியாது..” என்று கறாராக காக்கிகள் சொல்லிவிட, தென் மண்டல ஐ.ஜி.யை தொடர்பு கொண்டு பேசினார்கள் செய்தியாளர்கள். பிறகே, கல்லூரிக்குள் செய்தியாளர்கள். அனுமதிக்கப்பட்டார்கள்.
மொத்தத்தில் நீறுபூத்த நெருப்பாக ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டிய விவகாரம் கனன்று கொண்டிருக்கிறது சிவகாசியில். திக் திக் மனநிலையில் இருக்கிறார்கள் சிவகாசி மக்கள்.
No comments:
Post a Comment