கரீனா கபூரின் புதிய படமான ஹீரோயினின் டீசரைப் பார்த்த துபாயில் வசிக்கும் இந்தியர்கள் கடுப்பாகியுள்ளனர்.
பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கரின் இயக்கத்தில் கரீனா கபூர் நடிக்கும் படம் ஹீரோயின். ஒரு கதாநாயகியின் வாழ்க்கையை பற்றி கூறும் படம். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் ஒரு காட்சியில் கரீனா கபூர் செய்தியாளர்களைப் பார்த்து, நீங்கள் திரைக்கதை எழுத வேண்டும். ஒரு ஹீரோயின் கார் வாங்கினால், அதை அவருக்கு ஒரு தொழில் அதிபர் கொடுத்தார் என்றும், அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்றும், துபாய் சென்றால் விலை மாதுவாகிவிட்டார் என்றும் கூறுகிறீர்கள் என்று டயலாக் பேசுகிறார்.
இதைப் பார்த்த துபாய்வாசிகள் அதெப்படி கரீனா அப்படி வசனம் பேசலாம் என்று கொதித்தெழுந்துள்ளனர்.
இது குறித்து பிரபலமான துபாய் ரேடியோவான 'ரேடியோ ஸ்பைஸ்' நிகழ்ச்சி தொகுப்பாளர் கிரித்திகா ராவத் கூறுகையில், துபாயில் சட்டவிரோத மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் நடப்பதாகக் கூறி பாலிவுட் மீண்டும் துபாயின் இமேஜை கெடுத்துள்ளது. பல பாலிவுட் நட்சத்திரங்கள் இதே துபாயில் தான் வசிக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பெயர் போனது துபாய். அப்படி இருக்கையில் துபாயை தவறான கண்ணோட்டத்தில் காட்டியிருப்பது இயக்குனரின் அறியாமையையே காட்டுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
துபாயைச் சேர்ந்த தொலைக்காட்சி பிரபலம் உமா கோஷ் தேஷ்பாண்டே கூறுகையில், இது 2012ம் ஆண்டு. துபாயில் வேலைபார்க்க இந்தியர்கள் படகுகளில் வந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக துபாயில் வாழும் இந்திய சமுதாயம் தங்களுக்கென்று ஒரு மதிப்பை சம்பாதித்துள்ளது. தங்கள் தாய் நாட்டை பெருமைபடுத்தியுள்ளது.
தீவிரவாதம் மற்றும் விபச்சாரத்துடன் துபாயை இணைத்து பேசுவதை இந்திய படங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் தங்களின் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பாலிவுட்டின் முக்கிய சந்தைகளில் துபாயும் ஒன்று. அதனால் தான் இங்கு இந்திய படங்களின் பிரீமியர் ஷோக்கள் நடக்கின்றன.
பாலிவுட் படங்களை இந்தியர்கள் தவிரத்து அமீரகத்தைச் சேர்ந்தவர்களும் விரும்பிப் பார்க்கின்றனர். துபாயில் பெண்களுக்கு அதிக மரியாதை உண்டு. இது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்றார்.
இந்திய சினிமாவில் மதூர் பண்டார்கரின் சேவையை பாராட்டி கடந்த 2010ம் ஆண்டில் அவர் துபாயில் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் வரும் கதாநாயகி பொய் கதைகள் எழுதுவதை கண்டிக்கும் வகையில் அவ்வாறு கூறியதாக சினிமா ஆர்வலர் சமீர் ஹைதர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment