தனது படத்தை தங்களது விளம்பரத்தில் வெளியிட்ட சோப் கம்பெனியிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நடிகை தமன்னா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்காக, விளம்பரத்தில் நடிப்பதற்கு ஒரு ஏஜன்சி மூலம், என்னை பவர் சோப் நிறுவனம் அணுகியது. 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் எங்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒரு ஆண்டுக்கு என ஒப்பந்தம் ஏற்பட்டது. வியாபாரம் அதிகரித்ததால், ஒப்பந்தத்தை தொடர வேண்டும் என கேட்டனர். இதற்கு நான் ஒப்புதல் அளிக்க மறுத்தேன். 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விட்டது. எனவே, பவர் சோப் நிறுவனம் விளம்பரத்தில், பொருட்களில் எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த உரிமையில்லை. இந்நிலையில், சோப் விளம்பரத்துக்காக விப்ரோ நிறுவனம் என்னை அணுகியது. பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது, எனது புகைப்படம், வீடியோவை பவர் சோப் நிறுவனம் பயன்படுத்துவதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஒப்பந்தம் முடிந்த பின்னும், எனது புகைப்படம், பெயரை பவர் சோப் நிறுவனம் பயன்படுத்துகிறது. இதுகுறித்து எச்சரிக்கை விடப்பட்டது. நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனவே, பவர் சோப் விளம்பரத்தில் எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஒப்பந்தத்தை மீறியதற்காக, எனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, பவர் சோப் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். பின்னர் நடிகை தமன்னாவின் புகைப்படம், பெயரை எந்த விளம்பரத்திலும் பயன்படுத்த, புதுச்சேரியை சேர்ந்த பவர் சோப் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment