சன் குழும தொலைக் காட்சிகளின் சி.இ.ஓ.வாக கலாநிதி மாறனின் மகள் காவ்யா நியமனம் செய்யப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சன் டிவி குழுமத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்களும், 42 எப்.எம். ரேடியோ நிலையங்களும், தினகரன், தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களும், 4 வார இதழ்களும், டி.டி.ஹெச். தொலைக்காட்சி சேவை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி விளங்குகின்றது. இதன் மதிப்பு ரூ. 600 கோடிக்கு மேல் என்று கூறப்படுகின்றது.
சன் குழுமத்தின் இந்த ஆண்டு வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும்.
சன் டிவியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், சன் பிக்கசர்ஸ் தலைமை நிர்வாகியாகவும் இருந்த சாக்சேனா மீது திரைப்படத்துறையில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்ததன் பேரில், போலீசாரல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
மேலும் சன் தொலைக்காட்சிக்கு இணையாக தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் செயல்பட்டு வருவதால் சன் குழும சேனல்களை தரம் உயர்த்த கலாநிதிமாறன் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன் முதல்கட்டமாக காலாநிதி மாறனின் ஒரே மகள் காவ்யா சன் குழும சி.இ.ஓ.வாக நியமனம் செய்யப்பட உள்ளார் என்று அக்குழும சேனல்கள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment